டில்லி,

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 6 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 6 நீதிபதிகளின் பெயர்களை கொலிஜியம் தேர்வு குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட 15 பேரில் 6 பேர் உயர் நீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு சிலரின் பரிந்துரை  நிராகரிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினி தேவி, மதுரை நிரந்தர லோக் அதாலத் தலைவர் கிருஷ்ணவள்ளி, சென்னை எழும்பூர் நீதிமன்ற கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஜாகிர் உசேன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கி அப்பன், கருர் மாவட்ட நீதிபதி ஹேமலதா, தமிழக நீதித்துறை அகாடமி கூடுதல் இயக்குனர் அருள் ஆகிய 6 பேரின் பெயர்கள் கொலிஜியம் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இவர்கள் விரைவில் சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 53 நீதிபதிகளே பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக தற்போது மேலும் 6 நீதிபதிகள் நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.