பேத்தியிடம் தவறாக நடந்த மகனை கொலை செய்த மூதாட்டிக்கு ஜாமின்!!

சிவகங்கை:

பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போதை மகனை கொலை செய்த மூதாட்டிக்கு 3 வாரங்கள் கழித்து ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாக்கவாயல் கிராமத்தை சேர்ந்தவர் தேவி. வயது 68. கடந்த மாதம் 18ம் தேதி இவரது 47வயது மகன் போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது 19 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மகளை கட்டையால் அடித்துள்ளார். இதை கண்டு தாங்க முடியாத தேவி அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது மகனை வெட்டினார். இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்த அவரை சிவகங்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் கொலை அல்லது பாலியல் பலாத்காரத்தில் இருந்து தனிப்பட்ட முறையில் காத்துக் கொள்ள இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதை தொடர்ந்து சிவகங்கை எஸ்பி ஜெயச்சந்திரன் சட்ட நிபுணர்களை ஆலோசித்து முடிவு செய்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தேவி சார்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காவல் துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அவருக்கு இன்று ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 வார சிறை வாசத்திற்கு பின் தேவி வீடு திரும்பியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
English Summary
Bail for woman who saved granddaughter from sexual abuse by killing her own son