சென்னை: 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி.பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சென்னை மாநகராட்சி முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி 20,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட கட்டிடங்கள். தினசரி 40,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்துபவர்கள். தினமும் 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ‘திடக்கழிவு மேலாண்மை விதிகள் – 2026’ ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில்) அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இதுவரை குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்ட நிலை மாறி, இனி குப்பைகள் உருவாகும் இடத்திலேயே (வீடுகள்/நிறுவனங்கள்) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு கடந்த ஜனவரி 28ம் தேதி திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026 குறித்த அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட விதிகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள்-2026ன்படி, கீழ்காணும் அளவு கோள்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் அல்லது நிலையங்கள் “பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள்” ஆக வகைப்படுத்தப்படுகின்றன.
அதாவது, 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த தள பரப்பளவு கொண்ட கட்டிடம் அல்லது தினசரி 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் பயன்பாடு, மேலும் தினசரி 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவு உற்பத்தி செய்பவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வரையறை, நிறுவன பயனாளர்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், சொசைட்டிகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி.பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களையும் உள்ளடக்கும். திடக்கழிவுகள் மேலாண்மை-2026 விதிமுறைகளின் படி, சென்னை மாநகராட்சி வரம்பிற்குள் உள்ள அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கும் சில விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
அதன்படி, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள், சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். அனைத்து தகுதியுடைய பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களும், சமபந்தப்பட்ட மண்டல அலுவலர்களிடமிருந்து கடிதம் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாதவர்களுக்கு திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள்-2026ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தேவையான குப்பைத் தொட்டிகளை கொள்முதல் செய்து, கழிவுகளை தரம் பிரித்து, சென்னை மாநகராட்சி அல்லது சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தாங்கள் உண்டாக்கும் உயிரியல் கழிவுகளை தங்கள் வளாகத்திலேயே உரமாக்கல், உயிரி எரிவாயு ஆக்குதல் போன்ற முறைகளில் செயல்படுத்த வேண்டும்.பதிவிற்காக தனிப்பட்ட இணைப்பு, சென்னை மாநகராட்சியின் https://gccservices.in/bulkwaste/register என்ற இணையதளத்தில் உள்ளது. மண்டல அலுவலர்கள் (மண்டலம் 1 முதல் 15 வரை) நியமிக்கப்பட்ட பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குவார்கள்.
எனவே, அனைத்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]