சென்னை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்த நிலையில் மற்ற அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க முடியாத நிலையில், டெல்லியில் இருந்து தமிழ்நாடு புறப்பட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து நேற்று (மே 27ந்தேதி)  காலை தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார்.  தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார்.  அதனால் அவரது பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் s டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரம் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த பிறகு முதலமைச்சர் விஜய் நேற்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.  அப்போது, தமிழ்நாட்டிற்கான நிதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  சந்திக்க நேரம் கேட்கப்பட்ட நிலையில்,  நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால், டெல்லியில் முகாமிட்டுள்ள கேரள முதல்வர் சதீஷனை சந்தித்து வாழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ,  சோனியா காந்தியையும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியையும் , ’10 ஜன்பத்’ இல்லத்தில் முதலமைச்சர் விஜய் சந்திக்க  நேரம் கேட்டிருந்த நிலையில்,   10 ஜன்பத் இல்லத்தின் வெளியே ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரது படங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஆனால், கேரள மாநில முதல்வர் சதீஷன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாலும், கர்நாடக காங்கிரஸ் முதல்வர் விவகாரம் பூதாகாரமாக எழுந்துள்ளதாலும், விஜயை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இதையடுத்து, முதலமைச்சர் விஜய் அவசரமாக சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]