திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொட்டி வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மேலும மழை நீடிக்கும் என்று அறிவித்துள்ள இந்திய வானிலை மையம் 11 மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளா முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக,  கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில்  பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன், சாலைகளும் வெள்ள நீரைல் சூழப்பட்டு உள்ளன.  பலத்த மழையின் காரணமாக இடுக்கில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமானோர் அதில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 39 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவமும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மழைப்பிரதேசங்கள் மற்றும் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள  பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், முல்லை பெரியார் உள்பட பல அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.  மாநிலம் முழுவதும் உள்ள 78 அணைகளில் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இடுக்கி, இடமலையாறு, பம்பை, கக்கி ஆகிய பெரிய அணைகள் முழு கொள்ளளவு நீர் நிரம்பியதால் செவ்வாய்க்கிழமை காலை அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம் அந்த பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழையை குறிக்கும் வகையிலான இந்த ஆரஞ்சு எச்சரிக்கை வியாழக்கிழமை வரையிலும் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் அக்.1 முதல் 19ஆம் தேதி வரையிலும் பெய்த மழையுடன் ஒப்பிடும்போது, 20-ஆம் தேதிக்குப்பின் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் 19 வரையிலும் மாநிலத்தில் மொத்தம் 192.7 மி.மீ. மழை பதிவானது. ஆனால் அதன் பிறகு மொத்தம் 453.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 135 சதவீதம் கூடுதலான மழை பதிவாகும்.  திருச்சூர், ஆலப்புழையைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதத்துக்கு மேல் மழை பெய்துள்ளது. கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 223 சதவீதமும், ஆலப்புழையில் குறைந்தபட்சமாக 66 ததவீதமும் மழைப்பொழிவு காணப்பட்டது என தெரிவித்துள்ளது.