டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள குமான் பகுதியில்தான் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டுமே 42 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இயற்கையின் பேரழிவு தென்மாநிலமான கேரளாவிலும் ஏற்பட்டுள்ளதுடன், வடமாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்ட்டிலும் ஏற்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், பாலங்கள், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு அல்மோரா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக அதிக மழை கொட்டியது. ஒரே நேரத்தில் 21 செ.மீட்டர் மழை பெய்தது. மேலும் இம்மாநிலம்மலைபிரதேச பகுதி என்பதால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி தவித்து வரும் நிலையில், இதுவரை 48 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு செல்ல முடியாத அளவுக்கு சாலைகளும், பாலங்களும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல பகுதிகளில் உள்ளூர் மக்களே  மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

மீட்பு பணிகளுக்காக ஏற்கனவே மாநில அரசு சார்பில் மீட்புபடைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசின் தேசிய மீட்பு படையின் 15 அணியினர் சென்றுள்ளனர். ராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளூர் மீட்பு படையினருடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 300 பேரை தேசிய மீட்பு படை மீட்டுள்ளது.

வெள்ள சேத பகுதிகளை முதல்-மந்திரி புஷ்கார் சிங் டாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். நேற்றும், இன்றும் மழை குறைந்துள்ளது. இதனால் மீட்புபணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.