சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 5பவுன்வரை நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாகவும், குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.  ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பல அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர் ஸ்டாலின், விரைவில், நகைக்கடன் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது,   திமுக ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும்,  விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. அத்துடன்,  கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிறிய விவசாயிகளின் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டருந்து.

இந்த நிலையில், ஐந்து பவுனுக்கு மிகாமல் உள்ள நகைக் கடனை தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி டிவிட் பதிவிட்டுள்ள்ளார். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தொடர்பாக விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலை தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர், தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க 11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க ஆணை இடப்பட்டு உள்ளது. அதை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2.10 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

“கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கி வருகிறோம். மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.