சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை  சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை துறையினர் அனுமதித்து உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடும் நிலையில், செந்தில் பாலாஜி, மீண்டும் நெஞ்சுவலி என கூறி  சிறையில் இருந்து, மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ்  அமலாக்கத்துறையினரால், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி  கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் ஒரு மாத கால சிகிச்சைக்கு பிறகு,  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது அமைச்சர் பதவியை நீக்க திமுகஅரசு மறுத்து வருகிறது.

 தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 13ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி ரத்தக்கொதிப்பு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறி வருகின்றனர்.

Video Courtesy: ANI