சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில், காவிரி பிரச்சினையில், காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக காங்கிரஸ் அரசுமீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 20-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 21-ம் தேதி நிறைவு பெற்றது.  இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடர் இன்று (அக்டோபர் 9ந்தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, இன்றைய பேரவைக் கூட்டம் முடிந்ததும், எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

அதன்படி,  இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.   இன்றைய பேரவைக் கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

2024 நாடாளுமன்ற தேர்தல், சாதி வாரி கணக்கெடுப்பு என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த கூட்டத் தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சபை தொடங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், கே. பழனியம்மாள், வெ.அ. ஆண்டமுத்து மற்றும் பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது.

அதைத்தொடர்ந்து, கூட்டம் தொடங்கியதும் காவிரி நீரை திறந்துவிட கா்நாடகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் தீா்மானம் கொண்டு வரவுள்ளாா். அந்தத் தீா்மானம் எதிா்க்கட்சியான அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்படவுள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் செலவினம் தொடா்பான மானிய கோரிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்யவுள்ளாா்.  மேலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா். காவிரி பிரச்னை, தகுதி அடிப்படையில் மகளிா் உரிமைத் தொகை, ஆசிரியா்கள், மருத்துவா்கள் போராட்டம், சொத்துவரி உயா்வு, ஆவின் நிறுவன விவகாரம், டாஸ்மாக் பிரச்னை, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

அதிமுக தரப்பில் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் இருக்கை விவகாரமும் எழுப்பப்படவுள்ளது. இந்த விவகாரங்களுக்கு பதில் அளிக்க தொடா்புடைய அமைச்சா்களும் தயாராக இருப்பதாகவும், இதனால் பேரவை கூட்டத்தொடர் அதகளப்படுத்தும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.