பெங்களூர் நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளின் காட்சி ஒன்றும் அந்நகரவாசிகளுக்குப் புதிதல்ல.

கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூரு நகரில் சேரும் குப்பைகளின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. ஆனாலும், குப்பைகள் இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டாலும், அதை கையாளும் முறையில்தான் எந்த முன்னேற்றமும் வரவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 5757 டன் குப்பைகள் பெங்களூரு நகரில் சேர்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2014-2015 ஆண்டு காலகட்டங்களில், இந்நகரில் ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 டன் குப்பைகள் வரை உற்பத்தியாகின.

எனவே, இந்த 5 ஆண்டுகளுக்குள் நகரில் சேரும் குப்பைகளின் அளவு 2 மடங்கு அதிகரித்துள்ளதை அறியலாம். பெங்களூரின் மக்கள்தொகை கடந்த 2001ம் ஆண்டு 5.7 மில்லியன் என்பதாக இருந்தது. ஆனால், 2011ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 9.6 மில்லியனாக அதிகரித்துவிட்டது.

கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் மக்கள்தொகை, சட்டவிரோத கட்டுமானங்கள், காலாவதியான பதிவுகள், ஆன்லைன் வழியாக உணவு ஆர்டர் செய்தல் நடவடிக்கைகள் ஆகியவற்றால், குப்பைகளின் அளவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.