புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபடும் தனிநபர்களை கைதுசெய்யும் வரிவசூல் அதிகாரிகளின் அதிகாரம் குறித்து ஆய்வுசெய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வரி ஏய்ப்பு செய்வோரை கைது செய்யும் அதிகாரத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பலவித மனுக்கள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு.

வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு பெயில் வழங்குவது தொடர்பாக, வெவ்வேறு உயர்நீதிமன்றங்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதால், இதுதொடர்பாக ஒரு தெளிவான முடிவெடுக்க வேண்டிய தேவையிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து உயர்நீதிமன்றங்களும் இந்த ஜிஎஸ்டி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளை கையாளும்போது, தெலுங்கானா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தான் நிறுத்திவைத்த நிகழ்வை மனதில் கொள்ள வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.