திருவண்ணாமலை:

லவச கழிப்பறைகளில் கட்டணம் வசூல் செய்தவர்களை கைது செய்தும், நடவடிக்கை எடுக்காத  ஊராட்சி செயாளர்களை இடை நீக்கம் செய்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் திருவண்ணாமலை ஆட்சி தலைவர்.

நேற்று பவுர்ணமி தினமாகையால் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர். கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பிடங்களில்  பவுர்ணமி தினத்தன்று பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படக் கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், ஆட்சியர் உத்தரவையும் மீறி அதிகாரிகளின் துணையுடன் பணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இது குறித்த புகாரின் பேரில் நேற்று இரவு அதிரடி ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர் கந்தசாமி.

அப்போது,  அடி அண்ணாமலை, ஆணாய்பிறந்தான், வேங்கிக்கால், அத்தியந்தல் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கழிப்பறைகளில் நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படுவது தெரியவந்தது.

அதையடுத்து,  அப்பகுதிகளின் ஊராட்சிச் செயலாளர்களை  தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், இலவச கழிப்பறையில் வசூலில் ஈடுபட்ட சிலரை கைது செய்யவும் உத்தவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு காரணமாக பரபரப்பு நிலவியது. ஆட்சியரின் ஆய்வுக்கு கிரிவலம் வந்த பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.