சென்னை: 

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன்  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறையில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி மீது  நேற்று குற்றச்சாட்டு கூறியதை தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று மாலை தலைமை செயலகம் வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வனை போலீசார் தலைமை செயலகத்துக்குள் உள்ளே விட மறுத்த நிலையில், அவர்களை மீறி உள்ளே சென்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதையடுத்து,  போலீசார் அனுமதியை மீறி தலைமைச் செயலகத்திற்குள்  சென்றதாகவும், ஊழியர்களை  தாக்க முயன்றதாகவும் , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து  அவர்களை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும்,  வெற்றிவேல் தலைமறைவாகி விட்டதாகவும் கோட்டை காவல்நிலைய போலீசார் கூறி உள்ளனர்.

நேற்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளர்களான வெற்றிவேல் மற்றும் தங்கத்தமிழ் செல்வன், இ.பி.எஸ்.சின் உறவினர்களுக்கு மட்டுமே, நெடுஞ்சாலைத்துறைக்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ள தாகவும், இதன் மூலம் சுமார் 1500 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.