தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களின் தேர்தல் பார்வையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. தேர்தல் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த திறன் மற்றும் திறன் விரிவாக்கத்திற்காக ஆணைக்குழு பல்வேறு கட்டளைகளை வெளியிட்டுள்ளது அதில், தேர்தல் பணியின்போது, கண்ணியமாக உடையணிந்தும் தங்கள் நடத்தையில் கவனமாக இருக்குமாறும் கேட்டுகொண்டுள்ளது.

தேர்தல் ஆணையம், அனைத்து அதிகாரிகளையும், ஊழியர்களையும் பிரச்சினைகளைக் கையாளும்போது, தாங்கள் கலந்துக் கொள்ளும் கூட்டங்களில் மரியாதையாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும்” என்றும் “துல்லியமாகவும் தீர்க்கமாகவும் பேச வேண்டும்” என்றும் ஆணையிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களின் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பக்க நீளமுள்ள நெறிமுறைப் பட்டியலில், “அதிகாரிகளும் பணியாளர்களும் ஆணையத்தின் கூட்டம், மாநாடு, என எதுவாக இருப்பினும் நல்லொழுக்கத்துடனும், சரியான ஆடையுடனும் ஒழுங்கான தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை எல்லா நேரங்களிலும் பின்பற்றி பொறுப்பான அரசு ஊழியராக இருக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல்குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதிகாரிகளும் ஊழியர்களும், அன்று ஆலோசிக்கப்படும் தலைப்புகுறித்து தங்களை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருமாறு ஆணையம் அறிவித்துள்ளது.

“காலந்தவறாமை கண்டிப்பாகப் பின்பற்றப் பட வேண்டும். தேர்தல் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து ஊழியர்களும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் முன்னதாகத் தங்கள் இருக்கைகளில் அமர வேண்டும்,” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கூட்டங்கள் மற்றும் மாநாடுகளின் போது அதிகாரிகள் தங்களது கைப்பேசிகளை அணைத்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தேர்தல் தொடர்பான எந்தவொரு முக்கியமானத் தகவலும் கசியாமல் இருக்க வேண்டுமென, தேர்தல் ஆணையம் இம்முடிவை எடுத்துள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாகக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வருவதிற்கு வசதியாக அதிகாரிகளையும் பார்வையாளர்களையும் வாட்ஸப் என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வாட்ஸப் செயலியை “புத்திசாலித்தனமாகவும் ஆக்கப்பூர்வமாகவும்” பயன்படுத்த வேண்டும். “முக்கியமில்லாத அல்லது அற்பமான செய்திகளைப் பரிமாறிக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.