பதஞ்சலி விளம்பரங்கள் போலியானவை- மத்திய கண்காணிப்பு அமைப்பு தகவல்

Must read

பதஞ்சலி விளம்பரங்கள் போலியானவை

இன்றைய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மலிந்து காணப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையிலும், போலி விளம்பரங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை (DOCA)யின் புள்ளிவிவரமும் அதனை உறுதி செய்கின்றது. தவறான விளம்பரங்கள் குறித்து புகார்/குறைகளை நுகர்வோர் பதிவு செய்ய ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளது, DoCA.

மார்ச் 2015 மற்றும் மார்ச் 2016 க்கு இடையில், 1046 புகார்கள் இந்த வலைத்தளம் மூலம் பெறப்பட்டுள்ளன. இங்குப் பதிவு செய்யப்படும் புகார்கள் குறித்து முழுமையான ஆய்விற்குப் பின், புகாரின் தன்மைக்கு ஏற்ப, அந்தந்த மாநில அரசு அல்லது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அறிக்கை அனுப்பப்படுகின்றன. இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ,விளம்பரங்களைச் சுய ஒழுங்குமுறை செய்வதற்கான தன்னார்வ அமைப்பான, இந்திய விளம்பர தரக் கவுன்சில் (ASCI) புள்ளிவிவரத்தை மக்களவையில் மத்திய அரசு பகிர்ந்துகொண்டது.

அத்தகவலின் படி, 2013 மற்றும் 2016 இடையே, அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில், 525 தவறான, பொய்யான, ஆதாரமற்ற விளம்பரங்கள் வெளிவந்ததாகக் கண்டறியப்பட்டது. உணவு மற்றும் குளிர்பானங்கள், உடல்நலம், சுகாதாரம் ஆகிய துறைகளில் பல்வேறு தயாரிப்புகளைப் பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக, ஏப்ரல் 2015 மற்றும் ஜூலை 2016 க்கும் இடையில், பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட 33 விளம்பரங்களில், 25 விளம்பரங்கள் உண்மைக்கு மாறானது எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. விளம்பர உள்ளடக்கம்குறித்த 21 புகார்களில், 17 விளம்பரங்களில் விளம்பர உள்ளடக்கம் சுயக் கட்டுப்பாடு குறியீடுகளை (ASCI) மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 4 தயாரிப்புகளின் விளம்பரத் தகவல்களில், ASCI குறியீடு மீறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு பேக்கேஜிங் குறித்த 8 புகார்களில், சுயக் கட்டுப்பாடு குறியீடுகளில் (ASCI) தவறுள்ளதாக அளிக்கப்பட்ட ஆறு (6) புகார்கள் உண்மை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 4 தொலைக்காட்சி விளம்பரம் குறித்த புகாரில் இரண்டு உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக, பதஞ்சலி தயாரிப்புகள் மீதான 33 புகார்களில், 25 விளம்பரங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, பதஞ்சலி தாந்த் கன்டி (Dant Kanti) குறித்த விளம்பரங்களில் வெளியிடப்பட்ட கூற்றுகளை நிரூபிக்க, பதஞ்சலி நிறுவனத்திடம் எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது. வோடபோன், ஐடியா, ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், உபெர், லோரியல், பிராக்டர் & கேம்பிள், ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களில் கூட ASCI மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து, 80% விளம்பரங்கள் திரும்பப்பெறப் பட்டுள்ளன அல்லது குறிப்பிட்ட விளம்பரங்களில் தேவையான மாற்றம் செய்யப்பட்டுள்ளன என ASCI-யின் தகவல் தெரிவிக்கின்றது. இது போன்ற போலி விளம்பரங்களை இனம் கண்டு அத்தகைய தயாரிப்புகளை மக்கள் புறக்கணிப்பதே, இத்தகைய தவறுகளைக் கலைவதற்கான முழுமையானத் தீர்வு ஆகும்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article