திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டை உலுக்கிய கேரள தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், தற்போது பணமோசடி தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது  அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் (Veena Vijayan) மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்க இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.  இதையடுத்து, அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தெலுங்கான முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்,  சர்ச்சைக்குரிய ஒரு சுரங்க நிறுவனம் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் ஐடி நிறுவனத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகள் குறித்து மத்திய ஏஜென்சியான அமலாக்க இயக்குனரகம் (Enforcement Directorate) தனது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO), ஏற்கனவே சட்டவிரோத உதவித்தொகையை உள்ளடக்கியதாக சந்தேகிக்கப்படும் பரிவர்த்தனைகளை விசாரித்து வருகிறது. இந்த பரிவர்த்தனைகள் சுரங்க நிறுவனத்திற்கு,  குறிப்பாக ஆலப்புழா மற்றும் கொல்லம் கடலோரப் பகுதிகளில் தாது மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு கேரள அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு ஈடாக வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே  வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற தனியார் நிறுவனம் 2018 மற்றும் 2019 க்கு இடையில் வீணாவின் நிறுவனமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸுக்கு ரூ. 1.72 கோடியை முறைகேடாக மாற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த காலத்தில் CMRL க்கு அந்த ஐடி நிறுவனம் எந்த சேவையையும் வழங்கவில்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம்  கடந்த மாதம்,  உயர் நீதிமன்றத்தில்  எஸ்எஃப்ஐஓ நடத்திய விசாரணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையை யையில் எடுத்துள்ளது.

இந்த விவகாரம் ஏற்கனவே கேரள மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தநிலையில், 2024 ஜனவரி மாதம் கேரள சட்டசபையில்  பேசிய முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), தனது மனைவியின் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி தனது மகள் நிறுவனத்தைத் தொடங்கினார் என்றும், தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக,  கேரள மாநிலம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சுங்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகளாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயா் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பெங்களூரில் கைது செய்தனா். தொடா்ந்து இந்த வழக்கில் தொடா்புடைய கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கா், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மற்றொரு முன்னாள் ஊழியா் சரித் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா நேற்று வாக்குமூலம் அளித்தார். அவரது மனைவி கமலா, மகள் வீனா, மற்றும் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கும் தொடர்பு! ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு