சென்னை:  தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 27ந்தேதி மாலையுடன் நிறைவுபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் 1599 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  நேற்று  மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.  இதில் ஏராளமான சுயேச்சைகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் மார்ச் 16, சனிக்கிழமையன்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்தமுறை நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு முதல்கட்ட நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் வாங்ககு எண்ணிக்கை  ஜூன் 4 ஆம் தேதி  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அகில இந்திய திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக), நாம் தமிழர் கட்சி (என்டிகே) என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 20ந்தேதி தொடங்கி   மார்ச் 27ந்தேதி மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். சில இடங்களில் 3 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

 இதுவரை (மார்ச் 27ந்தேதி)  வேட்பு  மனு தாக்கல் செய்தவர்களின் மொத்த  எண்ணிக்கை 1599 என அறிவிக்கப்பட்டு உள்ளது.  பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடைசி நாளில் சுயேச்சைகளே அதிக அளவில் மனு தாக்கல் செய்து உள்ளனர். 

வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30-ந் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும்.  அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஏற்கனவே பங்குனி உத்திரம் நாளான்று அதிகபட்ச வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. சார்பில் நீலகிரியில் மீண்டும் களம் இறங்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தென்சென்னையில் போட்டியிடும் தயாநிதிமாறன், அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர்.

பா.ஜனதா சார்பில் கோவையில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜய்வசந்த் (கன்னியாகுமரி), ஜோதிமணி (கரூர்) ஆகியோரும் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

தென்சென்னையில் 64 மனுக்களும், மத்திய சென்னையில் 58 மனுக்களும், வடசென்னையில் 67 மனுக்களும்,

கரூரில் 73 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளது.

இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 1,599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.