உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதிவைத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.

வீர பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழக மாணவர்களின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் குறித்து அதே பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் திவ்யன்சு சிங், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி தாக்கல் செய்த ஆர்டிஐ மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

விடைத்தாளில் ஜெய் ஸ்ரீ ராம் மட்டுமே எழுதிய நான்கு மாணவர்களும் 50% மதிப்பெண்கள் பெற்றனர்.

உ.பி., மாநில பல்கலை., மாணவர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை, விடைத்தாளில் எழுதி, தேர்வில் தேர்ச்சி பெற்றதாக வெளியான தகவலையடுத்து, இரண்டு பேராசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐ பதில் மூலம் இந்த முறைகேடுகள் அம்பலமானது.

18 மாணவர்களின் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய திவ்யன்சு சிங் மறுமதிப்பீடு செய்ய கூறியதில் நான்கு பேர் 0 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து மாநில ஆளுநருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் பேராசிரியர்கள் வினய் வர்மா மற்றும் ஆஷிஷ் குப்தா ஆகியோர் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய லஞ்சம் வாங்கியதாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த இரண்டு பேராசியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள போதிலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.