மும்பை

மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் தமக்கு வயதாகி விட்டதால் அமலாக்கத்துறையிடம் ஆஜர் ஆவதில்  இருந்து விலக்கு அளிக்கக் கோரி உள்ளார்.

உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்   ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியின் வீட்டின் முன்பு கடந்த மார்ச் மாதம் வெடிபொருளுடன் ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததில் காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளது கண்டறியப்பட்டது.  இதையொட்டி மும்பை காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பரம்வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்துத் தர காவல்துரையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.    எனவே அனில் தேஷ்முக் பதவி விலக வேண்டிய நிலை உண்டானது.  இந்த புகார் குறித்து அனில் தேஷ்முக் மற்றும் அவரது உதவியாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

நேற்று அனில் தேஷ்முக்கின் தனிச் செயலர் சஞ்சிவ் பலாண்டே மற்றும் உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   ஏற்கனவே கடந்த 25 ஆம் தேதி அன்று அனில் தேஷ்முக் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.  சமீபத்தில் அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து  அவரை அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதற்கு தனது வழக்கறிஞர் மூலம் அமலாக்கத்துறைக்கு அனில் தேஷ்முக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.  அவர் அந்த கடிதத்தில், “சட்டத்தை மதிக்கும் குடிமகநான நான்  என் மீதான பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். இப்போது  எனக்கு 72 வயதாகிறது.  அத்துடன்  ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். இது கொரோனா காலம் என்பதால், தொற்றுக்குள்ளாகும் அபாயம் இருக்கிறது. ஆகவே எந்த நேரமானாலும் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்