டில்லி

நாளை முதல் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் கிளைகள் மற்றும் ஏ டி எம்மில் இருந்து மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக்கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

தற்போது அனைத்து வங்கிகளிலும் அந்தந்த வங்கிகளின் ஏ டி எம் அல்லது கிளைகளில் இருந்து பணம் எடுக்க எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.  வேறு வங்கிகளின் ஏ டி எம் களில் இருந்து பணம் எடுக்கும் எண்ணிக்கை மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   அதை விட அதிக முறை பணம் எடுப்போரிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டேட் பேங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்டேட் வங்கி ஏ டி எம் மற்றும் கிளைகளில் இருந்து மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி 5 ஆம் பரிவர்த்தனையில் இருந்து ஒவ்வொரு முறையும் ரூ.15 + ஜி எஸ் டி சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தவிர வங்கி வாடிக்கையளர்கள் 10 பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகத்தைப் பெற ரூ.40 + ஜி எஸ் டி கட்டணம் செலுத்த வேண்டும்.  இதைப் போல் 25 பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகம் பெற ரூ.75 + ஜிஎஸ்டி சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.   இந்த காசோலை கட்டணத்தில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  நாளை அதாவது ஜூலை 1 முதல் இம்முறை அமலாகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.