சென்னை: கடந்த வாரம் மறைந்த திமுக எம்.பி. மஸ்தான், கொலை செய்யப்பட்டு, அவர் நெஞ்சுவலி காரணமாக இறந்ததாக நாடகமாடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவரது உறவினர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டிசம்பர் 22ந்தேதி  திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான்  வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீர் நெஞ்சுவலி மற்றும் வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டது. அவரது உடல் அடக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, வழக்குபதிவு செய்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர்,  மஸ்தான் மரணத்தை, சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மஸ்தான் மரணத்தின்போது, அவருடன் பயணம் செய்த கார் ஓட்டுநர் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வந்தது.  தொடர்ந்து கார் ஓட்டுநர் உள்பட 5 பேரை அழைத்துச்சென்ற காவல்துறையினர்  ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இமரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்தால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையில் தொடர்புடைய இம்ரான், சுல்தான், நசீர் தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இதில், இம்ரான் என்பவர் மஸ்தான் தம்பியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான்தான் மஸ்தானை கொலை செய்ய தீட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமானது. மஸ்தானை கொலை செய்ய, இம்ரான் ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும்,  தொழில்போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.