சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்த தமிழகம் முழுவதும் வழக்கத்தைக்காட்டிலும் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுபோல மற்ற மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை முடிந்து, சொந்த ஊருக்கு சென்றவர்கள் வீடு திரும்புவார்கள். இதை கருத்தில்கொண்டு, ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலா 550 சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெளியூர் சென்ற பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு ஒரே நேரத்தில் திரும்புவார்கள் என்பதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்பதால், அதை  விர்க்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி,  மதுரையில் இருந்து 31ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக மதுரையில் இருந்து தலைநகர் சென்னைக்கு 160 பேருந்துகளும், கோவைக்கு 100 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இவை தவிர்த்து மீதமுள்ள பேருந்துகள் அண்டை மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், பழனி, அருப்புக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, கம்பம், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. தேவைப்படும் பட்சத்தில் இன்னும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.