ஜனநாயகக் கட்சியினர் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தும்போது, தற்போது கொரோனா நெருக்கடி, தள்ளிவைக்கப்பட்ட மாநாடு மற்றும் தேர்தல் நாள் பற்றிய கேள்விகள் முதன்மையாக முன்வைக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் தாமதமாக வாய்ப்புள்ளதா ?

ஜனாதிபதி வாக்கெடுப்பு வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி, கூட்டாட்சி சட்டத்தால் நிர்ணயிக்கப்படுவது என்பதால், டொனால்ட் டிரம்பிற்கு தாமதப்படுத்த அதிகாரம் இல்லை. அதற்கு காங்கிரஸால் இயற்றப்பட்ட மற்றும் ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்ட சட்டம் தேவைப்படும். அத்தகைய விளைவு இன்னும் பெரும்பாலானவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாததாகவே உள்ளது. ஆனால் நினைத்துப்பார்க்க முடியாத பல நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளன.

ஜோ பிடன் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரா?

ஆம், இந்த வாரம், வெர்மான்ட் செனட்டரும் ஜனநாயக சோசலிஸ்டுமான பெர்னி சாண்டர்ஸ் ஜனாதிபதி வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை நிறுத்தி வைத்தார். அவர் நாமிநேசனுக்கான பாதையை பார்க்க இயலவில்லை என்று கூறினார். சமூக மாற்றத்தை வென்றெடுப்பதற்காக தனது இளைஞர் தலைமையிலான இயக்கத்துடன் அமெரிக்க அரசியலை மாற்றியமைத்த சாண்டர்ஸ், இந்த துறையில் பிடனின் ஒரே மற்றும் கடுமையான போட்டியாளராக இருந்தவர்.  இது, பராக் ஒபாமாவின் கீழ் முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்தவரை, டிரம்பிற்கு சவால் விடும் நேரடி ஜனநாயக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளருக்கான தேர்தல்கள் இன்னும் நடைபெறுமா?

தொற்றுநோய் காரணமாக மட்டுமின்றி, ஜனநாயகக் கட்சியினருக்கு ஏற்கனவே ஒரு வேட்பாளர் இருந்தபோதிலும், பல மாநிலங்களுக்கு தங்கள் பரிந்துரையை கூற வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், பரவலான விமர்சனங்கள் மற்றும் அதைத் தடுக்க ஆளுநரின் சில தாமதமான முயற்சிகள் இருந்தபோதிலும், விஸ்கான்சின் அதன் முதன்மை வாக்கெடுப்பில் தனிப்பட்ட முறையில் வாக்களித்தது. ஆனால், இன்னும் வாக்களிக்காத பிற மாநிலங்களில், வாக்களிக்க ஜூன் வரை தாமதமாகிவிட்டன.

ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளருக்கான வாக்குச்சீட்டில் சாண்டர்ஸ் பெயர் ஏன் இன்னும் உள்ளது?

இந்த வாரம் சாண்டர்ஸ் தனது பிரச்சாரத்தை நிறுத்தி வைத்தபோது, பிடனையே தன்னுடைய கட்சியின் பிரதான வேட்பாளராக அவர் கருதுகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஆனால், இதன் மூலம் அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ  வேட்பாளர் ஆகிவிட்டார் என்று அர்த்தமல்ல – அவர் இன்னும் கட்சியின் பரிந்துரையைப் பெற வேண்டும், இது ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். (இப்போது இந்த மாநாடு ஆகஸ்ட்க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது). டிஎன்சியில் 1,991 உறுதிமொழி அளித்த பிரதிநிதிகளின் ஆதரவைப் பிடென் பெற்றால், அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இருப்பார். 2020 ஜனநாயக கட்சியின் மேடைகளில் தனது இடதுசாரி இயக்கத்தின் செல்வாக்கைத் தொடர்ந்து செலுத்துவதற்காக, இன்னும் முதன்மையான மாநிலங்களில் வேட்பாளருக்கான வாக்குப்பதிவில் இருப்பேன் என்று சாண்டர்ஸ் கூறியுள்ளார்.

மாநாடுகள் எவ்வாறு செயல்படும்?

77 வயதான பிடென் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு ஜூலை மாதம் விஸ்கான்சின் மில்வாக்கியில் நடைபெறவிருந்தது. ஆனால, இந்த  மாநிலமும் மற்ற நகரங்களைப் போல் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட, தேசிய மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆகஸ்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  அதே சமயம், டிரம்ப், கட்சியில் இருந்து கடுமையான போட்டியைக் கொண்டிராததால், அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்படுவார்.

பிரச்சாரம் தொடருமா?

அமெரிக்காவில் தற்போது நிலவும் சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி மற்றும் பல்லாயிரக்கணக்கான கொரோனா இறப்புகளைக் காட்டிலும் ஊடகங்கள் வெள்ளை மாளிகையில் தலைமைப் பதவிக்கு நிலவும் போட்டிகளையே அதிகமாக கவனித்து வெளியிட்டு வருகின்றன. நவம்பர் மாதத்திற்குள் தொற்று நோய் பரவல் முடிவக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், டிரம்பும், பிடனும் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். ஏற்கனவே, நாடு முழுவதும் 675,000 மக்களைக் கொன்ற ஸ்பானிஷ் காய்ச்சலின் போதும் 1918 இல் அமெரிக்கா இடைக்காலத் தேர்தல்களை நடத்திய வரலாறு உண்டு. இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப்  தனது கொரோனா பணிகளைப் பற்றிய விளக்கமளிக்கும் தினசரி நிகழ்வை தனது அரசியல் பணிக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்.  பிடென் அவர்களோ, டெலாவேரில் உள்ள வீட்டிலிருந்து பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே, பாட்காஸ்டை உள்ளடக்கிய ஒரு புதிய டிஜிட்டல் வழியை பயன்படுத்தி, வாக்களர்களை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறார்.

இந்த தேர்தலில் மின்னஞ்சல் – மூலம் – வாக்களித்தல் உபயோகப்படுத்த முடியுமா?

நியூயார்க்கில் உள்ள ஃபோர்டாம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான மோனிகா மெக்டெர்மொட் சமீபத்தில் கார்டியனிடம் கூறும்போது, “நாம் அனைவரும் இங்கு முற்றிலும் அறியப்படாத ஒரு நிலையில் இருக்கிறோம். எனவே, என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. நவம்பர் மாதத்திற்குள் தற்போதைய நிலைமை முற்றிலும் அடையாளம் தெரியாத நிலையில் மாறியிருக்கலாம். தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்பது கூட எங்களுக்குத் தெரியாது. அதை ஒத்திவைப்பது அல்லது அதை ஒரு “மின்னஞ்சலில்-மட்டுமே” தேர்தலாக மாற்றுவது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.”

நவம்பர் 3 ம் தேதி தேர்தல் எதிர்பார்த்தபடி நடக்குமானால், ஏற்கனவே முன்கூட்டிய வாக்களிப்பு அல்லது நேரில் இல்லா வாக்களிப்பை அனுமதிக்கும் மாநிலங்களில் நடத்தப்படும். உதாரணமாக, வாஷிங்டன் மாநிலம் பல ஆண்டுகளாக அஞ்சல் மூலம் தேர்தல்களை நடத்தியது அனுபவமுள்ளது. அதன் மாதிரி வாக்களிப்பு கடந்த மாதம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. ஆனால் 17 மாநிலங்கள் ஏதோ ஒரு காரணத்தில் இதை தவிர்க்கிறது. ஏனெனில், மின்னஞ்சலில் வாக்களிக்கும் முறையை நடைமுறைப் படுத்த இவர்கள் தங்கள் விதிகளை பெரிய அளவில் செலவழித்து மாற்ற வேண்டும்.

ஒரு வேட்பாளர் தகுதியற்றவராக இருந்தால் என்ன ஆகும்?

ஜனாதிபதியின் அமைச்சரவையும் காங்கிரசும் ஜனாதிபதி தகுதியற்றவர் என்று ஒப்புக் கொண்டால், அமெரிக்க அரசியலமைப்பின் 25 வது திருத்தம் துணை ஜனாதிபதி, செயல் ஜனாதிபதியாகலாம் என்று கூறுகிறது. எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இதுவரை இறந்திருக்கவில்லை அல்லது அவர்களின் நியமனத்திற்கும் தேர்தலுக்கும் இடையில் தகுதியற்றவராக மாறவில்லை. ஒரு வேட்பாளரை மாற்றுவதற்கான நடைமுறைகள் கூட்டாட்சி மற்றும் மாநில சட்டங்கள் மற்றும் கட்சி விதிமுறைகளால் வழிநடத்தப்படுகின்றன, ஆனால் நிலைமை இதுவரை ஏற்பட்ட முன் அனுபவம் இல்லை. தற்போதைய ஜனாதிபதியின் நிலையை பொறுத்திருந்தே காண வேண்டும்!

தமிழில்: லயா