காத்மாண்டு

நேபாள பிரதமர் 4 ஆம் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. எனவே, சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

கடந்த வாரம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அரசில் அங்கம் வகித்து வந்த ஜனதா சமாஜ்வாதி கட்சி (ஜேஎஸ்பி) தனது ஆதரவை கடந்த வாரம் திரும்ப பெற்றது. கூட்டுறவு சங்கங்களின் நிதியில் முறைகேடு செய்ததாக அந்நாட்டு உள்துறை அமச்சர் ரபி லாமிச்சானே மீது எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி தனது ஆதரவை விலக்கி கொண்டால் 30 நாட்களில் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி அதில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், நாடாளுமன்றத்தில் பிரசந்தா அரசு மீது நேர்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் 158 உறுப்பினர்கள் பங்கேற்றனர். பிரதான எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 157 வாக்குகள் பெற்று பிரசந்தா வெற்றி பெற்றார்.

இது பிரசந்தா பிரதமராக பதவியேற்ற 18 மாதங்களில் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் நான்காவது நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகும். ஏற்கனவே நடந்த நம்பிக்கை அனைத்து வாக்கெடுப்ப்பிலும் பிரதமர் பிரசாந்தா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.