சென்னை: கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து, அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக பிப்ரவரி 26ந்தேதி அன்று மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தமிழக அரசின் முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கைகளுக்குள் சென்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய விதிகளின்படி, 3 ஆண்டுகளுக்கு மேலே ஒரே பகுதியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர் என ஏராளமானோர் இடம்மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், சர்ச்சைக்குரிய வகையில் செயல்படும் பல அதிகாரிகளும் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோர் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக, கோவை மாவட்ட  புதிய ஆட்சியராக நாகராஜன், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.