சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பிளஸ்2 பொதுத்தேர்வு தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் இறுதியாண்டு கல்லூரி மாணாக்கர்களுக்காக  கல்லூரிகள் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக திறக்கப்பட்டு வந்தன.  2021 ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி,  9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தற்போது  கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும், 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, தேர்வு அட்டவனையும் வெளியானது.

ஆனால், தற்போது தொற்று பரவல்  மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால்,, பிளஸ்2 பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், பொதுத் தேர்வை தள்ளி வைக்கலாமா, மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் நடத்தலாமா என்பது குறித்து  பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மே 3ந்தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்! தேர்வு தேதி அட்டவனை வெளியீடு…