சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2 வது கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், ஏர்போர்ட் முதல் திருவொற்றியூர் வரையிலும் இரண்டு வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

மூன்றாவதாக மாதவரம் முதல் சிப்காட் (சிறுசேரி) வரையிலும், நான்காவது வழித்தடமாக பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலும் 2 ம் கட்டமாக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மூன்று மற்றும் நான்காம் வழித்தடம் சென்னை மயிலாப்பூரில் சந்திக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வழித்தடங்களும் சந்திக்கும் இடம் என்பதால் திருமயிலையில் அமையவிருக்கும் ரயில் நிலைய கட்டுமானப் பணிக்கு மிகவும் முக்கியத்துவம் அடைந்துள்ளது.

மிகவும் குறுகலான சாலைகள் அமைந்த நகரின் மிகவும் பழமையான பகுதியான மயிலாப்பூரில் பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு பூமிக்கு கீழே சுரங்கம் அமைப்பது மிகவும் சவாலாக இருக்கும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் நான்கு அடுக்குகள் கொண்டதாக இருக்கும் என்றும் அதில் மூன்று அடுக்குகள் ரயில் வழித்தடமாகவும் மற்றொன்று பயணிகளுக்கான பெரிய கூடமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாதவரம் முதல் சிப்காட் வரை செல்லும் வழித்தடத்தில் இருவழியில் ஒரு பாதை சுமார் 50 அடி (15 மீட்டர்) ஆழத்திலும் மற்றொரு பாதை 115 அடி (35 மீட்டர்) ஆழத்திலும் அமையவுள்ளது.

பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரை செல்லும் வழித்தடத்தின் இருவழி பாதையும் 79 அடி (24 மீட்டர்) ஆழத்தில் இடைப்பட்ட இடத்தில் அமையவுள்ளது.

இவ்விரு வழித்தடங்களுக்கான பக்கவாட்டு சுவர்கள் அமைக்கும் பணி தொடங்கி இருப்பதாகவும் இந்த கட்டுமானம் நிறைவடையும் போது திருமயிலை மெட்ரோ ரயில்நிலையம் மட்டுமானம் ஒரு பொறியியல் அற்புதமாக விளங்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.