சென்னை: இளைய தலைமுறையினரிடையே பொறியியல் கல்வி மீதான மவுசு குறைந்து வருவதால், போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லை. இதன் காரணமாக  தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த  2021 -22 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட  இருந்தனர். ஆனால், போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால, 20 கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மேலும்  10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 494 தனியார் கல்லூரிகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த நிலையில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு  10 கல்லூரிகள்  அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை. இதுதொடர்பாக அந்த கல்லூரி நிர்வாகம் அண்ணா பல்கலைக்கழக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும், அதில், போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் வரக்கூடிய கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தாங்கள் நடத்த விரும்பவில்லை, மாணவர் சேர்க்கையை நிறுத்திக் கொள்கிறோம் என்று  தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட  10 கல்லூரிகளில், இறுதியாண்டு படிப்பு முடியும் வரை கல்லூரிகள் இயங்கும் என்றாலும்,  இருக்கின்ற மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறிய பிறகு, 10 கல்லூரிகளும் முழுமையாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.