சென்னை : இன்று தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில்  கடனுக்கான வட்டி ரூ.148 கோடி உள்ளதாகவும்,  சென்னை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை ரூ.770 கோடி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2022 – 2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் செய்தார்.  அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் உள்பட, இலவச டயாலிஸ் மையம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த பட்ஜெட்டில் நிதி நிலை குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ.800 கோடி, தொழில் வரி மூலம் ரூ.475 கோடி, முத்திரை தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ.170, மாநில நிதிக்குழு மானியம் மூலம் ரூ.500 கோடி, இதர வகையில் ரூ.879.77 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2022-2023-ஆம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.2,824.77 கோடியாக இருக்கும் எனவும், அதே வேளையில்  வருவாய் செலவினம் ரூ.3,613.35 கோடியாகவும், மூலதன வரவு ரூ.2,528.80 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் சென்னை மாநகராட்சி 770 கோடி நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.1,836.84 கோடி, நிர்வாகச் செலவு ரூ.121.30, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி செலவு ரூ.1.079.31 கோடி, கடனுக்கான வட்டி ரூ.148.40 கோடி உள்ளிட்டவைகள் முக்கிய செலவுகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.