காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் விழாவில் வேத பாராயணம் செய்வதில் வடகலை – தென்கலை பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

108 வைணவ தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் காதுகூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டனர்.

நேற்று கங்கைகொண்டான் மண்டபத்தில் நடைபெற்ற உற்சவத்தில் வடகலை பிரிவினர் வேத மந்திரங்களை பாட தென் கலை பிரிவினரும் பாடுவோம் என கூற வாக்குவாதம் ஏற்பட்டது.

கோயில் விழாக்களில் திவ்ய பிரபந்தமோ, வேத பாராயணமோ இரு பிரிவினரும் பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இருந்தபோதும் இதுதொடர்பாக இருபிரிவினருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அதிகாரிகள் சமாதானம் செய்து வைத்தனர்.

இன்று 2 வது நாளாக நடைபெற்ற விழாவில் வடகலை – தென்கலை மோதல் வீதிக்கு வந்தது. கோவிலில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய வரதராஜ பெருமாள் வீதிவீதியாக வலம்வந்தார்.

பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இரண்டாவது நாளாக மீண்டும் தென்கலை – வடக்கலை இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர் என்பதை கூட பார்க்காமல், வடகலை – தென்கலை என இரு பிரிவினரும் கேட்கவே காது கூசும் வார்த்தைகளால் மக்கள் மத்தியில் மாறி மாறி திட்டிக் கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக வடகலை – தென்கலை பிரிவினர் இடையே தீராத மோதல் இருந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.