கொரோனாவுக்கு முன் 2019 ல் இந்திய ஆண்களின் ஆயுட்காலம் 69.5 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 72 ஆகவும் இருந்தது.

கொரோனா பரவலுக்குப் பின் கொத்து கொத்தாக மக்கள் மடிந்ததை அடுத்து இப்போது எடுக்கப்பட்ட புள்ளிவிவரப் படி இந்திய ஆண்களின் சராசரி வயது 67.5 ஆகவும் பெண்களின் வயது 69.8 ஆகவும் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

சர்வதேச மக்கள்தொகை கல்வி நிலையம் (ஐ.ஐ.பி.எஸ். International Institute of Population Studies) நடத்திய ஆய்வில் இந்தியர்களின் ஆயுட்காலம் கொரோனாவுக்குப் பின் சராசரியாக இரண்டாண்டுகள் குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மக்களின் நீடித்த ஆயுளுக்கு பல்வேறு காரணிகள் இருப்பதாக கூறும் ஐ.ஐ.பி.எஸ். சமீப ஆண்டுகளில் ஆயுள் குறைந்திருப்பதற்கு கொரோனா பெரும்துயரே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் போது பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், 35 முதல் 79 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கையே அதில் அதிகம் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இந்தியர்களின் சராசரி வயது கணிசமாக குறைந்திருப்பதாகவும் பேராசிரியல் சூர்யகாந்த் யாதவ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.