சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகம் சில மர்ம நபர்களால்  அடித்து நொறுக்கப்பட்டு, பெயர் பலகைகள் கிழித்தெறியப்பட்ட  நிலையில், அதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கடும் எச்சரிக்கையை விடுத்தார். இதைத்தொடர்ந்து, கிழிக்கப்பட்ட பெயர் பலகைகளை மீண்டும் திமுக்வினர் சரி செய்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

சென்னை முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் மர்ம நபர்கள்  சிலர் நுழைந்து அங்கிருந்த அம்மா உணவகம் பெயர் கொண்ட  பதாகைகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதை முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ” ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இந்த வன்முறை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனால் கோபமடைந்தவர், அம்மா உணவகத்தை தாக்கிய நபர்களை உடனே கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருப்பதுடன், அந்த பகுதி திமுக நிர்வாகிகளை அழைத்து, உடனே அதை சரி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதுகுறித்து திமுகவின் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் சென்னை மேயருமான, மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள டிவிட்டில்,

மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்.. என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர், கிழித்தெறியப்பட்ட அம்மா உணவக பெயர் பலகைகளை மீண்டும் அதே இடத்தில் வைத்து சரி செய்தனர். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.