டெல்லி:

பிரபல நிறுவனமான மகேந்திரா நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகப்போவதாகஅதன் நிறுவனர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்து உள்ளார்.   செபியின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக அந்தநிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகேந்திரா ஏப்ரல் 1, 2020 -லிருந்து விலகிறார். அவரது  ராஜினாமாவுக்கு பின்னர் நிர்வாக போர்டின் கவுரவ தலைவராக ஆனந்த் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளது.

நிறுவனத்திற்கு வழி காட்டுதல், நிர்வாக கமிட்டியை வலுப்படுத்துதல், பிரச்னைகளுக்கு தீர்வு அளித்தல், நிறுவனத்தின் அடுத்த வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்தல் உள்ளிட்ட பணிகளை ஆனந்த் மகேந்திரா  மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பங்கு சந்தையை ஒழுங்குமுறைப் படுத்தும் செபியின் அறிவுறுத்தலின்படி தலைமைப் பொறுப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ள மகேந்திரா நிறுவனம்,  நிர்வாக இயக்குனராக இருந்து வரும் பவன் கோயங்காவின் பொறுப்பு விரைவில் மாற்றப்பட்டு அவருக்கு கூடுதலாக தலைமை செயல் அதிகாரி பொறுப்பும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

தனது ராஜினாமா அறிவிப்பு குறித்து ஆனந்த் மகேந்திரா டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,  ‘மகேந்திரா நிறுவனத்தின் தலைமைத்துவ மாற்ற அறிவிப்பை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இன்னும் சிறப்பான நிர்வாகத்தை அளிக்க மகேந்திரா நிறுவனம் விரும்புகிறது. இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்பு அளித்த வாரியம் மற்றும் என்னை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் அவர் பதிவிட்டிருந்த டிவிட்டில், நான் ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்தேன். அப்போது நான் தமிழை படித்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எனது பள்ளித் தோழர்களிடமிருந்து, துஷ்பிரயோகம் செய்யும் சில வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன், தமிழைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். தமிழ் மொழியின் பெருமையை இந்தியா முழுவதும் நாம் பரப்ப வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.