நடிகர் மன்சூர் அலிகானுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் அமைப்பின் தலைவர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையிலான குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இந்திய ஜனநாயகப் புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக மற்றொரு பெரிய கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கிய நடிகர் மன்சூர் அலிகான் 1999ம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடம் பிடித்தார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் தற்போது புதிய அமைப்பு ஒன்றை துவங்கியுள்ளார்.

இந்த அமைப்பு சார்பில் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவரும் மன்சூர் அலிகான் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.