பெங்களுரு:

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது என்று பெங்களூரு சிறைத்துறை டிஜிபி கூறியுள்ளார்.

‘நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு சசிகலா சிறைத்தண்டனை குறித்த தீர்ப்பை உறுதி செய்ததையடுத்து, நேற்று மாலை பெங்களூர் சென்று சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டில் சரணடைந்தார் சசிகலா.

அங்கு அவர், சுடுநீர் வேண்டும், வெஸ்டர்ன் டாய்லட், மின்விசிறி, ஏசி என  பல வசதிகள் கேட்டிருந்தார். இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பெங்களூரு சிறைத்துறை டி.ஜி.பி. எச்.என்.சத்திய நாராயணா  இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையின் முதல் மாடியில் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 8-க்கு 10 அறை தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த அறையில் மின் விசிறி மற்றும் மேஜை கிடையாது. இருவருக்கும் கம்பளி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் அவர்கள் இருவருக்கும் சாப்பிட தேவையான தட்டு, டம்ளர் வழங்கப்பட்டு உள்ளது.

இருவருக்கும் கைதிகளுக்கு வழங்கப்படும் சீருடை வழங்கப்பட்டு உள்ளது. அது  புளு கலரில் பார்டர்போட்ட வெள்ளை சேலை. அதையே  இருவரும் அணிந்து உள்ளனர்.

இவர்கள் இருவரும் தாங்கள் விருப்பப்பட்டால் சிறையில் வேலை பார்க்கலாம் ஆனால் கட்டாயம் கிடையாது. மற்ற கைதிகளைப்போலத்தான் இவர்களும்  நடத்தப்படுவார்கள். எந்தவித சிறப்பு சலுகைகளும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.