மதுரை: யூடியூப்பர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. நியூஸ்18 வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து பதிவிட்டதாக, பிரபல யுடியூபர் மாரிதாஸை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை  கடுமையாக சாடியதுடன், தேசதுரோக குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையில் மாரிதாஸ்மீது, கடந்த ஆண்டு நியூஸ்18 தொலைக்காட்சி ஊடகம் அளித்த புகாரில் கைது செய்த காவல்துறையினர், அடுத்து, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச்சேர்ந்த இஸ்லாமியர் கொடுத்த புகாரின் பேரிலும் கைது செய்தனர். அவரது புகாரில், தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள்  என்று கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நீதிமன்றம், மாரிதாஸை 30ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மாரிதாஸ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும்,   மாரிதாஸ் இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாகும் வகையிலோ அல்லது அதனை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறி வழக்கு ரத்து செய்வதாக அறிவித்தார்.

மாரிதாஸ்மீது இதுவரை 3 வழக்குகளை தமிழ்நாடு காவல்துறை தொடுத்துள்ள நிலையில், 2 வழக்களை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மற்றொரு வழக்கான தொலைக்காட்சி ஊடகம் தொடர்பான வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில், மாரிதாஸ் தரப்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனு மீதான விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் மாரிதாசுக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு விசாரணை அதிகாரி முன்னிலையில் தினமும் ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.