சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில், மாநில ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தமிழகஅரசு கூறி உள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சூரப்பாவை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? திரைமறைவு பேரம் என்ன? என முந்தைய அதிமுக அரசை கேள்வி கேட்ட  மு.க.ஸ்டாலின், தற்போது ஆளுநரை கைகாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அண்ணா பல்கலைக்கழக வேந்தரான சூரப்பா மீது, 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாடு எழுந்தன. “தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது” என்று துணை வேந்தர் சூரப்பா மீதும் – அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, விசாரணை  நடத்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சூரப்பா தரப்பில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  துணைவேந்தர் சூரப்பா மீதான  நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆளுநருக்கு அனுப்ப இருப்பதாகவும்,   சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.

இதையடுதுது, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் அறிவித்துஉள்ளது.

தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சூரப்பா மீதான குற்றச்சாட்டுக்கள் காரணமாக, அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அப்போதைய அதிமுக அரசை வலியுறுத்தினார். ஆனால், தற்போது  சூரப்பாமீது நடவடிக்கை எடுக்க தயங்குவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் – மு க ஸ்டாலின்