சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில், ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவியிருப்பது பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு 34ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில், இன்று மாலை மீண்டும் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில்  குணமடைந்த 3 பேரை  தற்போது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறினார்.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதல்நபர் குணமடைந்து உள்ளதாகவும், மேலும் 2 பேர் குணமடைந்து மொத்தம் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர், வீடு திரும்பியவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது  என்றும் தற்போது 31 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை  4275 பேருக்கு ஒமிக்ரான் பரிசோதனை நடத்தி இருக்கிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் S வகை பாதிப்புக்குள்ளானோர் இன்றைய நிலவரத்தின்படி 79 அரசு மருத்துவமனைகளிலும், 12 தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அவர்களில் 23 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்ப உள்ளதாகவும், அனைவரும் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.