சென்னை

நேற்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மருத்துவக் காப்பீட்டு செயலி ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.

நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (27.02.2024) கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பிலான பின்வரும் நிகழ்ச்சிகளைப் பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை 6வது தளத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), அரசு பொது நிதி நடைமுறையை எளிமைப்படுத்துதல், கருவூலத்தில் இருந்து கடைசி பயனர் வரை நிதி சென்று சேர்வதைக் கண்காணித்தல், அரசு செலவினத்தை முறைப்படுத்துதல், சிறந்த நிதி கண்காணிப்பு செயலி மூலம் திட்டங்களைத் தீட்டுதல், அரசின் கடனைக் குறைத்தல் என்ற வகையில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது.

களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைப்பேசி செயலி, தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சுயசேவைகளை நேரம் மற்றும் இருப்பிடம் சாராமல் பயன்படுத்தும் வகையில் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது.

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு வலைத்தளம் (Website) மற்றும் கைப்பேசி செயலி (Mobile App) அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் (NHIS/PNHIS) சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சைகளின் விவரப் பட்டியல்கள், மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வலைத்தளம் மற்றும் கைப்பேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது.

கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) தொடர்பான பயிற்சிகள் வழங்கிடவும், நிதித்துறையின் கீழ் இயங்கும் துறை தலைமைகளின் பயன்பாட்டிற்கும் மற்றும் பொதுவான செயல்பாடுகளுக்காகவும் ரூ.16.11 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சிக் கூடம் மற்றும் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் திறக்கப்பட்டது. சென்னை மற்றும் மதுரை மண்டல இணை இயக்குநர்களின் அலுவலக பயன்பாட்டிற்காகவும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலரின் பயன்பாட்டிற்காகவும் ரூ.26.10 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று மகேந்திரா பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டது.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.