ராகுல் காந்தி ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை ?

Must read

 

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டம் முதல்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 16 ம் தேதி துவங்கியது.

பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது, தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்றும் அதனை தொடர்ந்து 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்றும் பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

இன்று வரை 26,19,72,014 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இதில் 21,26,81,921 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 4,92,90,093 இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இதுவரை 4 சதவீத மக்களுக்கு அதாவது சுமார் 4.93 கோடி பேருக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை தீவிரம் இன்னும் ஓயாத நிலையில் மூன்றாம் அலை குறித்த பேச்சுக்கள் எழுவதால் நாட்டு மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தி ஏன் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் ஏற்கனவே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர் என்றும், ராகுல் காந்திக்கு ஏப்ரல் மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் படி, இன்னும் மூன்று மாதங்கள் முடியாததால் அவர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று பதிலளித்து வருகின்றனர்.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி தயாரித்து அனுப்பிய இந்தியாவில் இதுவரை நான்கு சதவீத மக்களுக்கு மட்டுமே கடந்த 6 மாதத்தில் தடுப்பூசி போட்டிருக்கும் நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில்,

பா.ஜ.க. வின் நிர்வாக திறமையின்மையை மறைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ வேறு யாரும் ஏன் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு திசை திருப்பும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

More articles

Latest article