அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த அமெரிக்க நிதி மற்றும் வங்கித் துறை அதிகாரியை பணி நீக்கம் செய்து அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

வெல்ஸ் ஃபார்கோ என்ற அமெரிக்க நிதி மற்றும் வங்கித்துறை நிறுவனத்தின் இந்திய துணை தலைவராக இருக்கும் சங்கர் மிஸ்ரா மீது பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அமெரிக்க நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் 26ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 70 வயது பெண் பயணி டெல்லி போலீசிடம் புதனன்று புகார் அளித்தார்.

சம்பவம் நடைபெற்ற போது சங்கர் மிஸ்ரா அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததாகவும் குடிபோதையில் தனது பேண்ட் ஜிப்-பை திறந்து தன் மீது சிறுநீர் கழித்ததோடு அப்படியே நின்றுகொண்டு ஆபாசமாக பேசியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது அருகில் இருக்கும் மற்றொரு பயணி தலையிட்டதை அடுத்து அவரது இருக்கையில் அமர்ந்தார் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் வருத்தமளிப்பதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை முதல் வகுப்பில் அமரச்செய்ததாக கூறிய அவர் ஊழியர்கள் அந்த நபரை மீண்டும் தன்னிடம் அழைத்து வந்து வருத்தம் தெரிவிக்கச் சொன்னதாகவும் அதற்கு குடிபோதையில் இருந்த அவரும் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயணியின் புகாரை அடுத்து ஏர் இந்தியா நிறுவனமும் புகார் அளித்ததைத் தொடர்ந்து இ.பி.கோ. 354, 509 மற்றும் 510 ஆகிய பிரிவுகளின் தவிர இந்திய விமானச் சட்டம் பிரிவு 23 ன் கீழ் சங்கர் மிஸ்ரா மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாத சங்கர் மிஸ்ரா-வை தேடி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவர் அங்கு இல்லாத நிலையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அவரது மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் தொடர்பைக் கொண்டு அவர் பெங்களூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்ற போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

காவல்துறையினர் வருவதற்கு முன்பே அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு அங்கிருந்து சங்கர் மிஸ்ரா மாயமானதை அடுத்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு ஈ-மெயில் அனுப்பிய காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக சங்கர் மிஸ்ரா தொடர்பான தகவலை வழங்குமாறு கோரியுள்ளது.

அதேவேளையில், சங்கர் மிஸ்ரா-வை தேடுதல் குற்றவாளியாக அறிவித்து விமான நிலையங்கள் மற்றும் காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சிறுநீர் கழித்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சங்கர் மிஸ்ரா விமானங்களில் பயணிக்க ஒரு மாதம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், வெல்ஸ் ஃபார்கோ நிறுவனம் சங்கர் மிஸ்ராவை பணி நீக்கம் செய்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது மேலும், இந்த வழக்கு தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

விமானத்தில் பெண் பயனி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய டெல்லி போலீஸ் தீவிரம்