டெல்லி: “நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் வரை போராட்ட களத்திலேயே காத்திருப்போம் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்து உள்ளார்.

மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கடந்த ஓராண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மத்தியஅரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக இன்று  இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி,  “நாங்கள் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் “சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான அரசியலமைப்பு செயல்முறை முடிக்கப்படும். “விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. அவர்களுக்கு முழுமையாக சேவை செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நல்ல நோக்கத்துடன் விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால், அதை விவசாயிகள் விரும்பவில்லை,” என்று பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் அறிவிப்புக்கு விவசாய அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மேலும் தங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினரும் வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். , டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “விவசாயிகள் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.

பிரதமரின் வாபஸ் அறிவிப்பு குறித்த செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிஷான் விவசாய அமைப்பின் தலைவரான ராகேஷ் திகாயத்,  , “பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை வரவேற்கிறோம்.  அதே சமயம், குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமின்றி வேறு சில விஷயங்களுக்காகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அது குறித்து மத்திய அரசு எங்களுடன் பேச முன்வர வேண்டும் என்றார்.

மேலும்,”நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை நாங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் போராட்ட களத்திலேயே காத்திருப்போம்,” என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, விவசாயிகள், வேளாண் சட்டம் முழுமையாக வாபஸ் ஆகும்வரை டெல்லி எல்லையிலேயே முகாமிட்டிருப்பார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

வேளாண் சட்டம் வாபஸ் குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு அமைப்பின் தலைவரான பானுபிரதாப் சிங், பிரதமரின் வாபஸ்  நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். 75 ஆண்டுகளாக விவசாய விரோத கொள்கைகளால், ஏராளமான விவசாயிகள் கடனால் இறந்தனர். விவசாயக் குழுவை அமைத்து, பயிர் விகிதத்தை அந்த குழு  தீர்மானிக்கட்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன்.  இன்றைய அறிவிப்பின் மூலம் விவசாயிகளின் கடன்களை ஒரே நாளில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…