விஜயேந்திரர் நல்லவர்.. மென்மையானவர்.. : செல்லூர் ராஜூ சர்டிபிகேட்

Must read

மதுரை,

மிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, விஜயேந்திரர் நல்லவர்.. மென்மையானவர்.., தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது அவர் தியானத்தில் இருந்தார் என்று  கூறினார். இது மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா  நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரர், நிகழ்ச்சியில்  தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்தே இருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள், தமிழ் அமைப்புகள்  போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரி வரும் நிலையில் விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது தியானம் செய்தார் என்று சங்கர மடம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூ விஜயேந்திரருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது விஜயேந்திரர் தியானம் தான் மேற்கொண்டார் எனவும், விஜயேந்திரர் நல்லவர்..  மென்மையானவர்.. கனிவானவர், யாருக்கும் மரியாதை கொடுக்கத் தெரிந்தவர்… எனவே அதுகுறித்து மேலும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றும், விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் அவருக்கு ஆதரவாக கருத்து  தெரிவித்துள்ளார்.

விஜயேந்திரரின் அங்காரத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜு போன்றோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ விஜயேந்திரருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article