சென்னை,

 சென்னையில் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா என்பவர் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவை எச்.ராஜா நடத்தினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார்.

இந்த விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.  அப்போது ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.  ஆனால் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்தார்.

இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

விஜயேந்திரர் செயலுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், பா.ம.க. நிறுவனதலைவர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளர்.

இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“குறிப்பிட்ட நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அவமதித்துள்ளார் விஜயேந்திரர்.  இதனை எச்.ராஜாவும் கண்டும் காணாமல் இருந்து தமிழர்களை அவமதித்துள்ளார்.

அது போலவே நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் அமர்ந்திருந்த மேடையிலேயே காஞ்சி விஜயேந்திரருக்கு மட்டும் உயரமான தனி மேடையை எச்.ராஜா அமைத்து கொடுத்திருக்கிறார். இது மேடையில் இருந்த ஆளுனரை விடவும் அவர் உயர்ந்தவர் ,மற்ற அனைவரும் அவருக்கு கீழானவர்கள் என அரங்கத்தில் இருந்த அனைவரையும் இழிவு படுத்தியுள்ளார்கள்.

இறந்த காஞ்சி மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரர்  என்பவரும் ”தமிழ் நீஷபாஷை” ( தமிழ் தீண்டத்தகாத மொழி) எனவும் ”நண்பகல் பூஜையில் தமிழில் பேசினால் தீட்டு அதனால் தமிழில் பேசமாட்டோம்” எனவும் அறிவித்தவர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்த  சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள காஞ்சி சங்கர மடம், ”சங்கராச்சாரி தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நிற்பது மரபல்ல என்றும் அப்போது விஜயேந்திரன் தியானத்தில் இருந்தார்” எனவும் ஆணவத்துடன் கூறியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

தந்தை பெரியார் அவர்கள் தனக்கு கொள்கை உடன்பாடு இல்லை என்றாலும்கூட கடவுள் வாழ்த்து பாடும் பொழுதும், இந்திய தேசியம் குறித்து மாற்றுப்பார்வை இருந்தாலும் தேசிய கீதம் இசைக்கும் பொழுதும் அவை நாகரீகம் கருதி தள்ளாத வயதிலும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் உயரிய மனித நேயமாண்பை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.

ஆண்டாள் விடயத்தில் இன்னொருவரின் மேற்கோளை சுட்டிக்காட்டியதற்காகவே கவிஞர் வைரமுத்துவை   கீழ்த்தரமாகவும் சட்டவிரோதமாக தலையை வெட்டுவேன் எனவும் கூறிய எச்.ராஜா உள்ளிட்டோர் இப்போது தமிழை அவமதித்து தமிழர்களின் உணர்வை இழிவு படுத்தி இருக்கிறார்கள்.

காஞ்சி இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர்,,எச்.ராஜா ஆகியோர் தமிழர்களின் தன்மானத்தை, இன உணர்வை சீண்டிப்பார்க்கவேண்டாம். உடனடியாக தமிழை அவமதித்த காரணத்திற்காக திருவள்ளுவர் சிலை முன்பு நின்று அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று  கொளத்தூர் மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.