டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றியதாவது:

நாட்டின் இலக்கு என்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமல்ல, உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகும். கிராமங்களை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. விவசாயிகள் தங்களது விலை பொருள்களுக்கு உரிய விலையை பெறுவதை அரசு உறுதி செய்யும்.

மத்திய அரசு கொண்டு வந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்  சிறு, குறு விவசாயிகள் பலனடைந்துள்ளனர். கொரோனா லாக்டவுனில் வேளாண் உற்பத்தி புதிய உச்சத்தை தொட்டது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படாது. விவசாய சட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மிகப்பெரும் விவாதங்களை நடத்திய பிறகே 7 மாதங்களுக்கு முன்பு மூன்று புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது மூன்று புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக எந்த முடிவை எடுத்தாலும் அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். குடியரசு தினத்தன்று, மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முழு சுதந்திரம் அளித்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் சட்டம், ஒழுங்கையும் அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.