டெல்லி: தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என்று விமர்சித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்றம், சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு ஏற்று விசாரித்து வருகிறது. மே 30ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள்  தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை கொண்டே திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து நடிடபெற்ற விசாரணையின்போது,

தடுப்பூசிகளை மத்தியஅரசே வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க வேண்டும் என்றும், தடுப்பூசியின் விலையில் வேறுபாடு எதற்கு என்று கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என கருத்து  தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக யூனியன் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35000 கோடி எவ்வாறு இதுவரை செலவிடப்பட்டுள்ளது‘, 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அவற்றை ஏன் பயன்படுத்த முடியாது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று  உத்தரவிட்டது.

மேலும், அவர்கள் (மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்) தங்கள் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட முடிவு செய்திருந்தால், மத்தியஅரசின் கொள்கை, ‘ அவர்களின் பிரமாணப் பத்திரத்தில் இணைக்கப்படுவது முக்கியம், இதனால் அவர்களின் பிராந்தியங்களுக்குள் உள்ள மக்கள் ஒரு மாநில தடுப்பூசி மையத்தில் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள  உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாநில / யூடி அரசாங்கங்களும்  இதுகுறித்து 2 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளத.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் நிலையை தெளிவுபடுத்தி அவர்களின் தனிப்பட்ட கொள்கைகளை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளது.