பெற்றோர்களை கோர்ட், ஜெயில் வாசலில் நிற்கவைத்து விடாதீர்கள் டிடிஎப் வாசன் தாயார் உருக்கமான வேண்டுகோள்.

விலையுயர்ந்த வெளிநாட்டு பைக்குகளை வாங்கி இந்திய சாலைகளில் அதிவேகமாக ஓட்டுவதும் பைக் சாகசத்தில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டவர் டிடிஎப் வாசன்.

பைக்கில் இவர் செய்யும் வேடிக்கைகளை தனது யூ டியூப்பில் பதிவேற்றுவதன் மூலம் பணம் பார்த்துவந்த இந்த 23 வயது இளைஞரை லட்சக்கணக்கான சிறுவர்கள் பின்தொடர்கின்றனர்.

சாலை விதிகளை மீறி சாகசம் செய்துவந்த இவர்மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து போலீசில் சிக்கிய இவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த வாசன் நேற்று நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்ததை அடுத்து அவரை அவரது தாயார் கூட்டிச் சென்றார்.

டிடிஎப் வாசனை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை வாசலிலேயே உட்கார வைத்து தலை குளிக்க வைத்த அவரது தாயார் பின்னர் அங்கு கூடிய செய்தியாளர்களிடம் பேசுகையில் பெற்றோரை இதுபோல் காவல்நிலையம், கோர்ட் மற்றும் ஜெயில் வாசலில் கொண்டுவந்து நிறுத்திவிடாதீர்கள் என்று சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறிவுரை கூறினார்.

டிடிஎப் வாசன் தாயாரின் இந்த உருக்கமான பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.