போரூரை அடுத்த மாதனந்தபுரத்தில் மாநகர பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

படிக்கட்டிலும் மேற்கூரையிலும் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி சென்ற மாநகர பேருந்தை வழிமறித்து நிறுத்திய நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

பின்னர் அந்த பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்களை அடித்து கீழே இழுத்து தள்ளியதோடு பேருந்தில் இருந்து இறக்கி நடந்து போகச் செய்தார்.

ரஞ்சனாவின் இந்த நடவடிக்கை தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர்.

அரசு பேருந்தை வழிமறித்து நிறுத்தியது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் சிறுவர்களை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40 நாட்களுக்கு தினமும் காலை மாலை மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜாமீனில் வெளியே வந்த நடிகை ரஞ்சனா மகளிருக்கு என்று தனியாக பேருந்து உள்ளது போல் காலை மாலை வேலையில் பள்ளிக்கு சென்று வர மாணவர்களுக்கு என்று தனியாக சிறப்பு பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.