தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சேலம் மாநாட்டில் பேசிய பிரதமர், “இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதிக்கிறது. இந்து மதத்திற்கு எதிரான எண்ணங்களை விதைக்கிறார்கள். பிற மதங்களுக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு நொடி கூட வீணடிக்காமல் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இதை எப்படி பொறுத்துக் கொள்வது? இதை அனுமதிக்கவா?” என்று பேசியிருந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்காமல் பிரதமர் மோடி வாய்க்கு வந்ததை பேசியது குறித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் விதிகளையும் தேர்தல் நடத்தை விதிகளையும் மீறி ஒரு நாலாந்தர பேச்சாளர் போல் பேசியுள்ள பிரதமர் மோடி மற்றும் பாஜக தங்களது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

எதிர்காலத்தில் மதத்தின் அடிப்படையில் வாக்காளர்களிடம் முறையிடுவதைத் தவிர்க்கவும், பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.