சட்டீஸ்கரில் உள்ள ராய்பூர் சப் ஜெயிலர் வர்ஷா தோங்ரி என்பவர் பஸ்தார் சிறையில் பழங்குடிப் பெண்கள் அனுபவிக்கும் சித்ரவதைகளைப் பற்றி சமூகவலைத்தளத்தில் எழுதி அம்பலப்படுத்தியற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பஸ்தார் போலீஸ் நிலையங்களில் பழங்குடி இன பெண்கள் நிர்வாணக்கப்பட்டு சித்ரவதைச் செய்ததை கண்கூடாகப் பார்த்தேன் என்று அதை விவரித்து அவர் எழுதியிருந்தார். சுக்மாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்லப்பட்டதையடுத்து அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

“ சித்ரவதையைக் கண்கூடாகப் பார்த்தேன். பழங்குடிப் பெண்களைப் பிடித்து வந்து நிர்வாணமாக்கி அவர்கள் மார்பகங்களிலும், மணிக்கட்டுகளிலும் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தனர். நான் அவர்கள் உடல்களில் இந்த அடையாளத்தைப் பார்த்து பயந்து போய் விட்டேன். சிறு பழங்குடிப் பெண்களை பிடித்து வந்து ஏன் இந்த 3ம் தர சித்ரவதை செய்ய வேண்டும்? நம் அரசியல் சாசனமும், சட்டமும் இத்தகைய மனிதாபிமானற்ற சித்ரவதைகளை அனுமதிக்கவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த பதிவில், ‘‘நாம் இதனை ஆழமாகச் சிந்திக்க வேண்டும் உண்மை வெளிவர வேண்டும். பஸ்தாரில் இருதரப்பினரும் கொல்லப்படுகின்றனர். இருதரப்பினருமே இந்தியர்கள். பஸ்தாரில் முதலாளித்துவ உற்பத்தி முறை வலுக்கட்டாயமாக புகுத்தப்படுகிறது.

கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன. பழங்குடி இன பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். மாவோயிஸத்தை முறியடிக்கத்தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றனவா?” என்று ஆவேசமாக எழுதியிருந்தார்.

“பழங்குடியினர் மாவோயிசம் வேண்டாம் என்றே கூறுகின்றனர். ஆனால் பாதுகாப்புப் படையினர் அங்கு செய்யும் அட்டூழியங்களை அடுத்து அவர்கள் நீதிக்கு எங்குதான் செல்வார்கள்?” என்று தனது பதிவில் பதிவிட்டிருந்தார்.

சமூக வலைத்தளத்தில் பதிவு வைரலான பிறகு தோங்ரி அதனை நீக்கி விட்டார். ஆனால் சட்டீஸ்கர் சிறைத்துறை இவர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.